ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை வெற்றி

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, பனிப்பொழிவை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் மட்டையை பிடித்த கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து பேரிடி விழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் (0) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (6) ஹர்பஜன்சிங்கின் சுழலில் சிக்கினார்.

இந்த சறுக்கலில் இருந்து கொல்கத்தா அணியினரால் மீள முடியவில்லை. சென்னை கேப்டன் டோனி, வேகம்-சுழல் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார். அவரின் வியூகத்தை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. ராபின் உத்தப்பா (11 ரன்), நிதிஷ் ராணா (0) ஆகியோரை தீபக் சாஹர் வெளியேற்ற, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பிடியை பலமாக இறுக்கினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் (19 ரன்), சுப்மான் கில் (9 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை.

இதற்கு மத்தியில், இந்த ஐ.பி.எல்.-ன் அபாயகரமான ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் ஆந்த்ரே ரஸ்செல் 8 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஹர்பஜன்சிங் நழுவ விட்டார். இதே போல் அவர் 19 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ் முறைப்படி அப்பீல் செய்த போதும் பலன் கிட்டவில்லை.

ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் ஊசலாடிய கொல்கத்தா அணியை மூன்று இலக்கத்தை எட்ட வைக்க கடைசி விக்கெட்டுக்கு வந்த ஹாரி குர்னேவின் துணையுடன் ரஸ்செல் தனி வீரராக போராடினார். இதனால் ஒற்றை ரன் எடுப்பதை தவிர்த்த அவர் 19-வது ஓவரில் ஒரு சிக்சரும், 20-வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் விரட்டி கவுரவமான நிலையாக தங்கள் அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். அத்துடன் தனது அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக கொல்கத்தாவின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. தனது 6-வது ஐ.பி.எல். அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்களுடன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

சென்னை தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தீபக் சாஹர் வீசிய 4 ஓவர்களில் 20 பந்தில் ரன்னே அடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பின்னர் எளிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. குறுகிய நேரமே நின்ற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 17 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 14 ரன்னும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து நடையை கட்டினர்.

அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக செயல்பட்டனர். அதே சமயம் பனிப்பொழிவின் காரணமாக கொல்கத்தா பவுலர்கள் தடுமாற்றத்துடன் பந்து வீசினர். அணியின் ஸ்கோர் 81 ரன்களை எட்டிய போது, அம்பத்தி ராயுடு 21 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 43 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

சென்னை அணி ஜெய்ப்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *