என்னை பற்றி பேசினால், நான் பல விஷயங்களை பேசுவேன் – தினகரனை எச்சரித்த தங்க தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்க தமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்க தமிழ்செல்வன் பேசியதாக சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த ஆடியோ, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், உங்கள் அண்ணனை (டி.டி.வி.தினகரன்) இந்த மாதிரி அரசியல் செய்வதை நிறுத்த சொல் என்றும், நான் விசுவரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள் என்றும் தங்க தமிழ்செல்வன் ஆவேசமாக பேசுவதாக உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வனை விமர்சித்ததோடு அவரை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை தேர்வு செய்ய உள்ளோம்” என்றார். தங்க தமிழ்செல்வன் முடிவு செய்துவிட்டு வருவதால் அவரிடம் இனி விளக்கம் கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில், தந்தி டிவிக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

தினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல. நான் அமைதியாக இருப்பேன், என்னை குறித்து பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங்களை பேசுவேன். என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமையாக கூட இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *