எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை – ரோகித் சர்மா

ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பொல்லார்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. மிகக்குறைந்த இலக்காக இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் எளிதாக அடிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது நீண்ட தூரம் கொண்ட தொடர். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். சூழ்நிலையை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அதில் இருந்து ஏராளமான உறுதியை பெற முடியும்.

ஹர்திக் பாண்ட்யா சூழ்நிலையை புரிந்து கொண்டது அணியின் பார்வையில் அது மிகவும் முக்கியமானது. காயத்திற்குப் பிறகு அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது அவருக்கும் முக்கியமானது’’ என்றார்.