ஊரடங்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல குடும்பங்களை மோடி அரசு சிதைத்துவிட்டது – ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லியில் ஒரு கல்லூரியில் படித்துவந்த தெலுங்கானா மாணவி ஐஸ்வர்யா, கடந்த 2-ந் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா ஊரடங்கால் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னால் படிப்பை தொடர முடியுமா என்ற கவலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதுகுறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த துக்கமான நேரத்தில் நான் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி அரசு வேண்டுமென்று மேற்கொண்ட நாடு தழுவிய ஊரடங்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால், எண்ணற்ற குடும்பங்களைச் சிதைத்து விட்டது. இதுதான் உண்மை’ என்று கூறியுள்ளார்.