உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து!

காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான அட்டவணை இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் சில புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதேசமயத்தில் சில கட்சிகள் தனித்து களம் இறங்க திட்டமிட்டு வருகின்றன. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஆளும் தி.மு.க. தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள 80 சதவீத இடங்களில் போட்டியிட அ.தி.மு.க.மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்தனர். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் மாவட்ட வாரியாக தேர்தல் வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. சட்டசபை தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் இழந்த பலத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சாமியானா பந்தல் போட்டு, நாற்காலிகளை சமூக இடைவெளியில் அமைத்து ஏற்பாடு செய்து இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று மாலையே சென்னை வந்தனர்.

ஆனால் நேற்று இரவு திடீரென அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை இந்த கூட்டத்தில் எடுக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அதற்காகவே அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தை 4 நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. இதனால் 9 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அடுத்து என்ன செய்வது என்பதே புரியாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கூட்டம் மீண்டும் எப்போது நடைபெறும் என்பதும் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுப்பது பற்றி இப்போதே பேசினால் சிக்கல் ஏதேனும் உருவாகிவிடும் என்று கருதப்படுகிறது. அத்தகையை சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆலோசனை கூட்டத்தில் யார்- யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டால் அது மீண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே உரசல்களை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தரப்பில் இதை மறுத்தனர். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். எனவே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தனர்.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இன்று காலையில்தான் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் இதை கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராக இருந்த பலரும் எதற்காக கூட்டம் ரத்து ஆனது என்பது புரியாமல் உள்ளனர்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. தரப்பில் கூட்டம் நடத்தி முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.