Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும் – கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சிநகர், செல்வவிநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கடம்பூர்ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேங்கியுள்ள மழைநீரை விரைவாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 428.4 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இதுவரை 547 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆண்டு மழையளவு சராசரியாக 662.2 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இதுவரை 699.53 மில்லி மீட்டர் பெய்து உள்ளது.

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் குளங்கள் தூர்வாரப்பட்டன. இதனால் அதிகளவு மழை பெய்தாலும், பாதிப்புகள் இல்லாமல் மழைநீர் குளங்களில் சேமிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு பொருட்சேதம், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்து குளங்களும் பராமரிக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து குளங்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். 90 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இன்று வரை அந்தகூட்டணி தொடருகிறது. ஊரக பகுதிகளுக்கு முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நல்ல நடைமுறை.

இந்த நடைமுறையை பார்த்து இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் பின்தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதனை வரவேற்கிறோம்.

தி.மு.க. அவசர வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இது எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இல்லை. அதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி தற்காலிகமான வெற்றி, ஏமாற்று அறிக்கையால் பெற்ற வெற்றி என்பதை கூறினோம். அது நிரூபிக்கப்பட்டு விட்டது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் தமிழக வாக்காளர்களிடம் தமது கதை செல்லாது என்று தேர்தலை சந்திக்க பயந்து கோர்ட்டுக்கு சென்று உள்ளார். நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *