உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

உலகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து,  உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில், உலக நிலை குறித்து பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த இருக்கிறார்.

உலகப் பொருளாதார அமைப்பின் இந்த கருத்தரங்கு, காணொலி மூலம் வரும் 21 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.  ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுவா ஓன் டேர் லயன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், சீன மக்கள் குடியரசின் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் உரையாற்றுகின்றனர்.

மூத்த தொழில் துறை தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமுதாய சங்கங்களை சேர்ந்தவர்களும் இதில் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் உலகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது மற்றும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.