உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 170 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

துவக்க வீரர்கள் டாம் லாதம் 9 ரன்களிலும், தேவன் கான்வாய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதன்பின்னர் இணைந்த கேன்வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி நிலைத்து நின்று ஆடினர். அவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பகீரத பிரயத்தனம் செய்தும் பலன் இல்லை.

இறுதியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது. கேன் வில்லியம்சன் 52 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.