உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி – 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் நியூசிலாந்து

ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளைமறுதினம் (ஜூன் 18) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் அந்த அணிதான் இரண்டு ஆண்டிற்கு சிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும்.

இரண்டு நாடுகளும் நேற்று 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என, நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி வெற்றிபெறும் என நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா பேலன்ஸ் பவுலிங் அட்டாக்கை பெறும் என நினைக்கிறேன். அவர்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம்.

நியூசிலாந்து ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அவர்கள் டாஸ் வென்றால், பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்தியாவை மிகவும் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆக்கலாம். இது நியூசிலாந்தின் மோசமான யோசனை என நான் கூறமாட்டேன். நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்து, இந்தியாவை குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழக்க செய்யாவிடில், இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வைத்துள்ளார்கள். அது நியூசிலாந்துக்கு கடினமாகிவிடும்.

ஆகையால் டாஸ் வென்று என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமானது. அதேபோல் முதல் இன்னிங்ஸும் முக்கியமானது’’ என்றார்.