உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணி இன்று தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. ஜூன் 23-ந்தேதியை ரிசர்வ் டே-வாக அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

4 தொடக்க ஆட்டக்காரர்கள், 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 9 பந்துவீச்சாளர்கள், 3 விக்கெட் கீப்பர்களைக் கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளதாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதையும்  கருத்தில் கொண்டே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.