Tamilவிளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை – ஜோகோவிச், ஓசாகா முதலிடத்தில் நீடிப்பு

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 31 வயதான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (11,160 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் இந்த வாரத்தையும் சேர்த்து மொத்தம் 250 வாரங்கள் முதலிடத்தை அலங்கரிக்கிறார். இதன் மூலம் முதலிடத்தை 250 வாரங்கள் ஆக்கிரமித்த 5-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,765 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (5,590 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (5,565 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (5,085 புள்ளிகள்) 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 21 வயது ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,151 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். செக் குடியரசின் கிவிடோவா (5,835 புள்ளிகள்), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,682 புள்ளிகள்), ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (5,220 புள்ளிகள்), செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (5,111 புள்ளிகள்), உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4,921 புள்ளிகள்), நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (4,765 புள்ளிகள்), அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (4,386 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டி (4,275 புள்ளிகள்), பெலாரஸ்சின் சபலென்கா (3,520 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *