உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன.

ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடாததை கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் மற்றும் எளிதில் உடல்நிலை பாதிக்கக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி  மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகிறார்.

செப்டம்பர் மாதம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்த ஜெர்மனி அரசு விரும்புவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி உள்ளது.

பிரான்சில இதுவரை 64.5 சதவீத மக்களுக்கும், ஜெர்மனியில் 62 சதவீத மக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரான்சில் 49 சதவீதம் பேருக்கும், ஜெர்மனியில் 53 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.