உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றுக்கு தேர்வான அணிகளின் விவரம்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதேபோல், சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன. ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், கனடா கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடுகள் வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது.