Tamilவிளையாட்டு

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 2022-ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும். 5-வது இடத்தை பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதும். இதில் சாவ்பாலோ நகரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மார் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். ஆனால் அது ‘ஆப்-சைடு’ கோல் என்று நடுவர் அறிவித்து விட்டார். பந்து 74 சதவீதம் பிரேசில் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தாலும் அவ்வளவு எளிதில் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 40-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் டக்லஸ் லூயிஸ் பந்தை வலைக்குள் தள்ளினார். அந்த சமயத்தில் மற்றொரு பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் கீப்பரை ‘பவுல்’ செய்ததால் அந்த கோலும் மறுக்கப்பட்டது.

பிற்பாதியில் ஒரு வழியாக பிரேசில் கோல் போட்டது. அந்த அணியின் ராபர்ட்டோ பிர்மினோ 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு கோல் ஏதும் விழவில்லை. முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் பிரேசில் 9 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பிரேசில் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் உருகுவேயை இன்று சந்திக்கிறது. அதே சமயம் நடப்பு தொடரில் இன்னும் ஒரு கோல் கூட அடிக்காத ஒரே அணியான வெனிசுலாவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ், டார்வின் நுன்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. சிலி அணியில் இரண்டு கோல்களையும் முன்னணி வீரர் அர்துரோ விடால் அடித்தார்.