உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி – ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாராட்டு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியது. அதன்பிறகு 2020-21-ம் ஆண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணில் புரட்டியெடுத்தது.
இவ்விரு தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக டிம் பெய்ன் செயல்பட்டார். அவர் இந்திய கேப்டன் விராட் கோலியை தற்போது வெகுவாகப் புகழ்ந்துள்ளார். 36 வயதான டிம் பெய்ன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அவரை போன்ற வீரர் தங்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று எந்த அணியும் விரும்பும்.

களத்தில் கடும் போட்டி அளிக்கக் கூடியவர். அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். எங்களுக்கு எதிராக ஆடுவதை சவாலாக எடுத்துக் கொள்வதுடன், கோபமூட்டுவதையும் விரும்புவார். ஏனெனில் இதன்மூலம் அவர் களத்தில் சிறப்பாக செயல்படுகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொடரின் போது அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என தெரிவித்தார்.