உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், ‘234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவில் உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும்’ என்று பேசினார்.

இந்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதும் மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவில் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும்’ என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் உயரிய பொறுப்புக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பயனுள்ளவராக இருப்பார் என்கிற பேச்சு தான் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவர் அமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறேன். அவரை சின்ன வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அவருடைய தாத்தா, அப்பா ஆகியோர் மக்களுக்காக உழைக்கும் ஜீனை கொண்டவர்கள். அதேபோல மக்களுக்காக உழைக்கும் ஜீன் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது பொறுப்புணர்வை பார்க்கும்போது அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனால் என்ன என்கிற ஆசையை வெளிப்படுத்துகிறோம்.

கேள்வி:- துணை முதல்-அமைச்சர் பதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா அல்லது எந்த மாதிரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- பெரிய பொறுப்பு என்று சொல்லும்போது அடுத்ததாக அமைச்சராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதைத்தான் நான் சொல்லி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.