Tamilசெய்திகள்

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது – ஈரான் அறிவிப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச்சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தது.

ஆனால், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், “பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *