Tamilவிளையாட்டு

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் கலந்துக்கொள்ள தடை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் தடை விதிக்கின்றன.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷியா மீது தடை விதிக்க விளையாட்டு அமைப்புகளுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சர்வதேச கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பும் கூட்டாக அறிவித்தன.

அதேபோல உலக அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதித்து உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

மேலும் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியிலும் ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ரஷியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடத்தப்படாது என்று சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷியா மீது சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனமும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழுவின் முடிவு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவருடனான சந்திப்பைத் தொடர்ந்து ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு மார்ச் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. மேலும் அறிவிப்பு வரும் வரை இந்த தடை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் பெலாரஸ் நாடு ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த நாட்டின் வீரர், வீராங்கனைகளுக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் சங்கம் தடை விதித்துள்ளது.

எகிப்தின் கைரோவில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுவரை ரஷிய வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி அவர்களால் அப்போட்டியில் பங்கேற்க இயலாது.