உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

உக்ரைனில் போர் நடந்து வருவதையடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனில் விமான போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவோக்கியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இதையடுத்து இந்த நாடுகளின் எல்லைகளுக்கு உக்கிரைனில் இருக்கும் இந்தியர்கள் வருகிறார்கள். இதுவரை 5 விமானங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் எல்லை நோக்கி செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐ.நா.சபையில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்ததால் ஆத்திரம் அடைந்துள்ள உக்ரைனை சேர்ந்தவர்கள் இந்திய மாணவர்களை அவமதித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். போலந்து நாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் போலீசார் இந்திய மாணவர்களை தாக்குவதாகவும், எல்லையை கடக்க அனுமதி மறுப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ‘போலந்து-உக்ரைன் எல்லையை நோக்கி மாணவர்கள் தங்களது உடைமைகளுடன் செல்லும் போது உக்ரைன் காவலர் ஒருவர் மாணவரை எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மான்சி சவுத்ரி என்ற மாணவி கூறும்போது, ‘இங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிறது. இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை போலந்து எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை. மாணவிகளை கூட துன்புறுத்துகிறார்கள். அவர்களின் தலைமுடியை பிடித்து இழுக்கிறார்கள். கம்பியாலும் தாக்கினர். இதில் சில மாணவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதராக அதிகாரிகள் எங்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற உதவிகளை செய்கிறார்கள். ஆனால் எல்லை காவலர்கள் எங்களை கடக்க விடுவதில்லை. எல்லையை யாராவது கடக்க முயன்றால் கம்பிகளால் தாக்குகிறார்கள். முகத்தில் குத்துகிறார்கள். துப்பாக்கி சூடும் நடத்தினர்.

நான் எல்லையை கடக்க 3 நாட்களாக காத்திருந்தேன். நாங்கள் விலங்குகளை போல சித்ரவதை செய்யப்பட்டோம். அவர்களது மக்களை (உக்ரைன் நாட்டவர்) கடக்க அனுமதிக்கிறார்கள். எங்களை எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை’ என்றார்.

மேலும் உக்ரைனில் இருக்கும் மாணவிகள் கூறும் போது, ‘உக்ரைன் ராணுவத்தினர் எங்களை திடீரென்று தாக்குகிறார்கள். அவர்கள் ஏன் இப்படி ஆக்ரோசமாக நடந்துகொள்கிறார்கள் என்று புரியவில்லை.

இந்திய தூதரக அதிகாரிகள் ரெயில் மூலம் நாட்டை விட்டு வெளியே போகச்சொன்னாலும் இங்கு பயணிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை’ என்றனர்.