இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற நடிகர் விவேக்!

கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த இளையராஜா பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவிடமே பாராட்டு பெற்றிருக்கிறார் நடிகர் விவேக்.

இதை பற்றி விவேக் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: “என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்திற்காக இசைஞானி இசை அமைத்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ பாடல் ஆகும்.

ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சமீபத்தில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன். அவரிடம் உரையாடிய போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன் என்று கூறி நான் வாசித்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ காணொளியை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்.

இளையராஜாவுடனான உரையாடலின் போது நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும், அடுத்த சந்ததியினரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன்.

அதைக்கேட்ட இசைஞானியும், என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றும் விதத்தில் தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக’ என்று எழுதி கையெழுத்திட்டு தந்துள்ளதாக” விவேக் கூறினார்.