இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கியது

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக கருதப்படுவதால் அதனை தகுதி உள்ள அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி பெரும்பாலானவர்கள் செலுத்திக்கொண்ட நிலையில் முன்எச்சரிக்கை என்று சொல்லக்கூடிய பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கட்டணத்துடன் போடப்படுகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்த நிலையில் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்தது.

2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியிருந்தும் பலர் பணம் செலுத்தி போட முன்வரவில்லை. தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான கால அவகாசம் 6 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இதையடுத்து முன் எச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75-வது பொன் விழா சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஜூலை 15) முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் அதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிமணியன் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இதே போல அனைத்து மாவட்டங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.

18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் என்றாலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் முடிந்து இருக்கக்கூடியவர்தான் போட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி ஒரு கோடியே 35 லட்சம் பேருக்கு இன்னும் போட வேண்டியுள்ளது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்களாக 3½ கோடி பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போட தொடங்கும் இந்த நாளில் கோவிஷீல்டு பூஸ்டர் செலுத்தக்கூடியவர்கள் 3 கோடியே 13 லட்சத்து 38 ஆயிரத்து 545 பேரும், கோவேக்சின் செலுத்தக் கூடியவர்கள் 41 லட்சத்து 88 ஆயிரத்து 276 பேரும் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு முன்னதாக 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பூஸ்டர் தடுப்பூசி இன்று முதல் 75 நாட்களுக்கு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். அரசு கொரோனா மையங்களில் இலவசமாக செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணை எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அதே நிறுவனத்தைச் சேர்ந்த பூஸ்டர் தடுப்பூசியே செலுத்த வேண்டும். மாற்றி போடக்கூடாது.

பொதுமக்கள் கூடும் இடங்கள், அலுவலகங்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தலாம். சிறப்பு முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவுடன் அதற்கான சான்றிதழ் ஆன்லைன் வழியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதி வரை செலுத்தப்படும் நிலையில் 4 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்து 995 பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.