இலங்கை குண்டு வெடிப்பு சதி வேலையில் ஈடுபட்டவர்களில் ஒரு பெண் இருப்பதாக தகவல்

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது எனவும், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, இலங்கையில் வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறியதாவது:

தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என தெரிய வந்துள்ளது. இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *