இலங்கையின் வெற்றியை கொண்டாடிய கவுதம் காம்பீர் – வைரலாகும் வீடியோ

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அனைவரையும் கவரும் வகையில் ஒரு செயலைச் செய்தார். மைதானத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகீர்ந்து கொண்டார்.

கம்பீர் இலங்கைக் கொடியை கையில் எடுத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த சம்பவத்தின் வீடியோவை கம்பீர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் அணி… உண்மையிலேயே தகுதியானது!!#வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா.” என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.