இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் மலன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

மலன் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்களை இலங்கை அணியினர் விரைவில் வெளியேற்றினர்.

இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை 91 ரன்களில் ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கையுடனான டி 20 தொடரை 3- 0 என கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருது டேவிட் மலானுக்கும், தொடர் நாயகன் விருது சாம் கர்ரனுக்கும் அளிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.