இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைக்கு அரசு வேலை வழங்கிய மிசோரம் அரசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும், ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதால் பாராட்டுகள் குவிகின்றன.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம்பெற்ற மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு அரசு வேலை மற்றும் சொந்த ஊரில் வீட்டு மனை வழங்கப்படும் என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் பயிற்சிக்காக அவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
—————-
ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிற்பகல் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே அஜர்பைஜான் வீரர் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். அவரது உடும்பு பிடியில் சிக்காமல் கடுமையாக போராடினார் பஜ்ரங் புனியா. எனினும் இறுதியில் 5-12 என்ற புள்ளி கணக்கில் புனியா தோல்வியைத் தழுவினார்.

அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் அல்லது செனகல் வீரருடன் நாளை விளையாட உள்ளார் புனியா.

——-