இன்று காய்கறி, மளிகை கடைகளில் வழக்கம் போல வியாபாரம்

சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், புழல் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை தினமும் இந்த கடைகள் அனைத்தையும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் தினமும் 6 மணி நேரம் செயல்படலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இன்று இந்த கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் இடங்களில் அருகில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு சென்று எப்போதும் போல அவைகளை வாங்கினார்கள்.

மீன் மார்க்கெட்டுகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. நேற்று அதிகளவில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியது. இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதே போன்று சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், புழல் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஓட்டல்களில் 3 வேளையும் பார்சல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணி முதல் 10 வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் பார்சல்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அனைத்து ஓட்டல்களிலும் வழக்கம் போல பார்சல் விற்பனையும் நடைபெற்றது. இதனால் ஓட்டல்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கின.