இன்று ஓணம் பண்டிகை – மலையாள மக்கள் கொண்டாட்டம்

தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க திருவிழா ஓணம் பண்டிகை. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்க திருமால் வாமனராக அவதரித்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்ததுடன் முதல் அடியில் பூமியையும், 2-ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3-ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்பட்டார். அப்போது மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இதை ஏற்று அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் 10 நாட்கள் மலையாளிகள் கொண்டாடுகின்றனர்.

ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, ஓணப் புடவை கட்டிக் கொண்டு வீட்டு முற்றத்தில் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களால் அத்தப்பூ கோலம் போடுவார்கள். இது மகாபலி சக்கரவர்த்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக நம்பிக்கையாகும்.

வீட்டு வரவேற்பறையிலும் மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு, அதன் நடுவில் குத்துவிளக்கு ஏற்றி பழங்கள் காய்கறிகளை வைத்து வணங்குவார்கள். தொடர்ந்து

உலக்கையால் ஊஞ்சல் கட்டி, அத்தப் பூ பூத்தல்லோ… ஓணம் வந்தல்லோ… என்ற ஓணம், பாடல்களைப் பாடி விளையாடி மகிழ்வார்கள்.

கானம் விற்றாவது ஓணம் உண்… என்ற பழமொழி ஓண சத்யா என்ற விருந்தின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ஓண சத்யா என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, உப்பேரி, பப்படம், சீடை, ஊறுகாய் உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.

மாலையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் நடத்தப்படுகிறது.