இன்சமாம் உல் ஹக் விரைவில் நலம் பெற வேண்டும் – சச்சின் பிரார்த்தனை

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் இன்சமாம் உல் ஹக். மைதானத்தில் சாந்தமாக இருக்கும் இன்சமாம் உல் ஹக் பேட்டிங்கில் அதிரடி காட்டக்கூடியவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்திருந்தது. சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மானேஜர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்சமாம் உல் ஹக் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்த சூழ்நிலையில் இருந்து வலுவாக திரும்பி வருவீர்கள் என நம்புவதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இன்சமாம் உடல் நிலை குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் எப்போதும் அமைதியாக இருந்தாலும் போட்டிக்குரியவராகவும், களத்தில் ஒரு போராளியாகவும் இருந்தீர்கள். இந்த சூழ்நிலையில் இருந்து நீங்கள் மிகவும் வலிமையானவராக திரும்புவீர்கள் என நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். விரைவில் நலம் பெறுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.