இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான் வழி பாதை மீண்டும் திறக்கப்படுமா?
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.
இந்த சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழி பாதையை முற்றிலுமாக மூடிவிட்டது. பின்னர், மார்ச் 27-ந் தேதி, மீண்டும் திறந்தது. ஆனால், டெல்லி, தாய்லாந்து தலைநகர் பாங்காக், மலேசியா தலைநகர் கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் விமானங்களுக்கு மட்டும் வான்வழி பாதையை பயன்படுத்த தடை விதித்தது.
இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விமானங்கள், கோலாலம்பூருக்கு 4 விமானங்களும் பாங்காக், டெல்லி ஆகியவற்றுக்கு தலா 2 விமானங்களும் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தன. இவை லாபகரமான வழித்தடம் என்பதால், இவற்றை நிறுத்தியதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது குறித்து 15-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித்தொடர்பாளர் முஜ்தாபா பைக் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட மந்திரிகளும், அவர்களின் அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்திய விமானங்களுக்கு தடையை நீக்கலாமா? தொடரலாமா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதே நாளில் முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.
ஆனால், பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவரும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான பவத் சவுத்ரி, ‘‘இந்தியாவில் தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவி ஏற்கும் வரை இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, தேர்தல் முடியும் வரை, வான்வழி பாதை விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும்’’ என்றார்.