Tamilசெய்திகள்

இந்திய வரலாற்றியேயே அதிகம் வெப்பம் டெல்லியில் பதிவாகியுள்ளது

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் நேற்று (மே 29) பதிவாகியுள்ளது. அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் நேற்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வானிலை மைய வட்டார இயக்குனர் குல்தீப் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தானில் இருந்துவீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை முதலில் தாக்குவதால் ஏற்கனவே நகரத்தில் நிலவில் அதீத வெப்பநிலையுடன் வெளியில் இருந்து வரும் இந்த வெப்பக்க காற்றானது இணைந்ததில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

52.3 டிகிரி செல்ஸியஸ் என்பது டெல்லியில் நேற்று சராசரியாக கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட 9 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.

சுமார் 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றத்தின் தாக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஹீட் ஸ்டார்க் உள்ளிட்ட வெப்ப பாதிப்புளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி தவிர்த்து நேற்று ராஜஸ்தானில் 51 டிகிரி செல்சியஸும், அரியானாவில் 50.3 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்துக்கு மத்தியிலும் நேற்று மாலை வேலையில் டெல்லியின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளனர்.