Tamilசெய்திகள்

இந்திய ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம்!

இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். கப்பல் படை மற்றும் விமானப் படையில் 13.09 சதவீத பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ராணுவ சிப்பாய் வேலையில் பெண்களையும் சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.

இதையடுத்து சிப்பாய் பணியில் சேர ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ராணுவத்துக்கு 100 பெண் சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆர்வம் உள்ள இளம்பெண்கள் ஏப்ரல் 25-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 17½ வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், பொது வினாதாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பெண் சிப்பாய் பணியில் சேர நாடு முழுவதும் இளம்பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். 100 பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கு மேல் இளம்பெண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

ராணுவத்தில் சேர இந்திய இளம்பெண்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

இந்திய ராணுவத்தில் பெண்கள், அதிகாரிகள் ரேங்க் அளவில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது சிப்பாய் படையிலும் பெண்கள் சேர்க்கப்படுவதால் இந்திய ராணுவத்தில் பெண்கள் எண்ணிக்கை கூடும்.

இதுகுறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராணுவ போலீஸ் படை பிரிவில் பெண்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதில் 100 பணியிடங்களுக்கு, 2 லட்சத் துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இறுதியில் அவர்களுக்கான தேர்வு நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் வீதம் அடுத்து 17 ஆண்டுகளில் 1700 பெண்களை ராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறது.

இங்கு பெண்கள் படை சிப்பாய்கள் ராணுவ பாதுகாப்பு உள்ள பிராந்தியங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 100 பேர் கொண்ட முதல் பெண்கள் படையினர் செயல்பாட்டை பொறுத்து இன்னும் கூடுதல் படைகளை உருவாக்க முடிவு செய்யப்படும்.

பெங்களூரில் உள்ள ராணுவ போலீஸ் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். பெண்கள், ராணுவ பாதுகாப்பில் ஜம்மு-காஷ்மீர், வடமாநிலங்கள் போன்ற இடங்களில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தபடுவார்கள்.

மேலும் அவர்கள் குற்ற வழக்கு விசாரணை செய்யவும் பயன்படுத்தபடுவார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *