Tamilசெய்திகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த பைஜூ நிறுவனர்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சத்தம் இல்லாமல் இணைந்திருக்கிறார்.

கண்ணூர் மாவட்டம் அழிக்கோட்டைச் சேர்ந்தவர் பைஜூ ரவீந்திரன். என்ஜினீயரிங் படித்த பைஜூ, படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கினார்.

அப்போது மாணவர்களுக்கு கல்வியை எளிதாக கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். இதற்காக திங் அண்ட் லேர்ண் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்க பைஜூ ஆப் ஒன்றை உருவாக்கினார்.

பைஜூ ஆப்பில் தொடக்கக் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் பதிவிடப்பட்டன. செயல்முறை கல்வி, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இது குழந்தைகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து பைஜூ மொபைல் ஆப்பிற்கு வரவேற்பு குவிந்தது. வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர்.

இந்த ஆப்பை பயன்படுத்த ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 35 மில்லியனையும் தாண்டி விட்டனர்.

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திங் அண்ட் லேர்ன் நிறுவனம் மளமளவென வருவாயை குவிக்க தொடங்கியது.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்நிறுவனத்தின் வருவாய் 150 மில்லியன் டாலரை எட்டியது.

ஆண்டுக்கு ஆண்டு பைஜூ ரவீந்திரனின் திங் அண்ட் லேர்ன் நிறுவனம் வருவாயை ஈட்டி வருவதை தொடர்ந்து அவரது பெயர் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் 2020-ம் ஆண்டுக்குள் ஆன்லைன் மூலம் கல்வி கற்போர் எண்ணிக்கை மற்றும் ஆன்லைன் மார்க்கெட் 5.7 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பைஜூ ரவீந்திரனின் நிறுவனமும் கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இப்போதுள்ள நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஸ்பான்சராக பைஜூ ரவீந்திரனின் திங் அண்ட் லேர்ன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதி வரை பைஜூவின் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் அபிஷியல் ஸ்பான்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோல அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனத்திடனும் பைஜூ ஆப் ஒப்பந்தம் செய்துள்ளது. 2020 முதல் அமெரிக்காவிலும் பைஜூ ஆப் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *