Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி – நாளை தொடங்குகிறது

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2 டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. இதேபோல வங்காளதேச அணியும் முதல் முறையாக பகல்-இரவில் ஆடுகிறது.

இந்த டெஸ்ட் வரலாற்று சிறப்பை பெறுகிறது. இந்திய மண்ணில் முதல்முறையாக நடைபெறும் இந்த பகல்-இரவு டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பாரம்பரியமிக்க ஈடன் கார்டன் மைதானம் பெற்றுள்ளது. உள்ளூர் போட்டியான துலிப் டிராபி 2016-ல் பகல்-இரவாக நடத்தப்பட்டது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

பகல்-இரவு டெஸ்டில் இளம்சிவப்பு நிற (பிங்க்) பந்துகள் உபயோகிக்கப்படும். இந்த வகையான பந்துகள் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக வீரர்கள் கடந்த சில தினங்களாக சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் பலவீனமான வங்காளதேசத்துக்கு எதிராக விளையாடுவதால் இந்திய அணிக்கு பகல்-இரவு டெஸ்டில் எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது. வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, கேப்டன் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இதில் தொடக்க வீரரான அகர்வால் கடந்த டெஸ்டில் இரட்டை சதம் (243 ரன்) அடித்தார். குறுகிய போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றார்.

பந்துவீச்சில் முகமது‌ஷமி மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். முதல் டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றினார்.

இதேபோல வேகப்பந்தில் உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா ஆகியோரும் சிறப்பாக வீசிவருகிறார்கள். சுழற்பந்தில் அஸ்வின், ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

முதல் டெஸ்டில் 3 நாட்களில் வெற்றியை நிர்ணயித்த இந்திய வீரர்கள் பகல்-இரவு டெஸ்டிலும் அதுபோன்ற வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறார்கள்.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. 6 பேட்ஸ்மேன்கள், 5 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும்.

வங்காளதேச அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் அந்த அணியால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.

வங்காளதேசம் இதுவரை இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெற்றி பெற்றது கிடையாது. 10 முறை விளையாடி 8-ல் தோற்றது. 2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அந்த அணியில் முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, லிட்டன் தாஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நாளைய பகல்-இரவு டெஸ்ட் போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விர்த்திமான் சஹா, ஜடேஜா, அஸ்வின், உமேஷ்யாதவ், முகமது‌ஷமி, இஷாந்த்சர்மா, ரி‌ஷப்பந்த், சுப்மன்ஹில், குல்தீப் யாதவ், ஹனுமன் விகாரி.

வங்காளதேசம்: மொமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கய்ஸ், ஷாத்மேன் இஸ்லாம், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, லிட்டன் தாஸ், மெகிதி ஹசன், அபுஜெயத், எபாதத் உசேன், அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், மொஸ்தக் உசேன், நயீம் ஹசன், சயீப் ஹசன், தஜில் இஸ்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *