இந்திய அணி சர்ச்சை குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கருத்து

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் நடந்துமுடிந்தது. இதில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, தொடரில் 2 – 1 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்றாலும், அணியின் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினை ஏன் இதுவரை தொடரின் ஒரு போட்டியில் கூட சேர்க்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாக பேசபட்டு வந்தது. ரசிகர்களும் ஆங்காங்கே கேள்வி கேட்டு வந்தனர்.

அஸ்வின் கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மீண்டும் ரவிந்திர ஜடேஜா அணியில் இடம்பெற்று விளையாடினார். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாத காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தால் இந்தியாவுக்கு இன்னும் சாதகமான சூழல் இருந்திருக்கும் என பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ் டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு ரசிகராக 4வது டெஸ்ட் போட்டியைப் பாருங்கள். அணி தேர்வு குறித்தும் பிற தேவையற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவதை விடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல விளையாட்டை தவறவிடுகிறீர்கள்.

இந்தியா, மிகச் சிறப்பாக விளையாடியது. விராட் கோலி பிரமாதமாக அணியை வழிநடத்தினார். இறுதிப் போட்டியைக் காண ஆவலுடன் இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.