இந்திய அணியின் அபார பந்து வீச்சு – 108 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ அணி

இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷுப்மான் கில் களம் இறங்கினர்.

பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர். பிரித்வி ஷா 29 பந்தில் 40 ரன்களும், ஷுப்மான் கில் 58 பந்தில் 43 ரன்களும் அடித்தனர்.

அதன்பின் வந்த அனைவரும் சொதப்பினர். பும்ரா தாக்குப்பிடித்து விளையாடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா 194 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆஸ்திரேலியா ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜோர் பேர்ன்ஸை ரன்ஏதும் எடுக்கவிடாமல் டக்அவுட்டில் ளெியேற்றினார்.

அடுத்து வந்த நிக் மேடின்சன் 19 ரன்னிலும், மெக்டெர்மோட் டக்அவுட்டிலும் வெளியேறினர். மார்கஸ் ஹாரிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி 32 ரன்னில் ஆட்டமிழக்க அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்னில் சுருண்டது. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி பந்து வீச்சில் அனல் பறந்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முகமது ஷமி, நவ்தீப் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.