இந்தியா வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளத்தை விரும்புகிறது – ராகுல் காந்தி
மத்திய கலாச்சார அமைச்சகம் இந்திய மரபணு வரலாறு மற்றும் இந்தியாவில் இனத்தின் தூய்மை குறித்து ஆய்வு திட்டத்திற்காக டிஎன்ஏ விவரக்குறிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிநவீன இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பூர்வீக இந்தியர்களா? என கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் என்பது இந்தியர்களின் அமைப்பு அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி, இந்தியா வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளத்தை விரும்புகிறது, என்றும், இன தூய்மை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.