இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர்களுக்கு வாய்ப்பு இல்லை – பிசிசிஐ திட்டவட்டம்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி அந்நாட்டுடனான நேரடி கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பிறகு இதுவரை இரண்டு அணிகளும் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், பேசியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில்
இது குறித்து பதில் அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் சொந்த வணிக ஆதாயங்களுக்காக இந்த வாய்ப்பை வழங்கினாலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது என்றும், அது மத்திய அரசின் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது, இந்திய அணி வெளிநாடுகளில் பிற அணிகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.