Tamilவிளையாட்டு

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் – நாளை வெலிங்டனில் தொடங்குகிறது

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை கலங்கடித்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்து தகிடுதத்தம் போட்டது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 60 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் தலா 20 புள்ளிகள் கிடைக்கும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்திய அணி, சாதுர்யத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தினால் போதும். நியூசிலாந்தை வெலவெலக்க வைத்து விடலாம். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். கவனம் சிறிது தவறினாலும் பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப் பகுதியில் கேட்ச்சாகி விடும். மேலும் அவர்கள் அதிகமாக ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலையே தொடுப்பார்கள். அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். தாக்குப்பிடித்து விட்டால் ரன்மழை பொழிந்து விடலாம்.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்க இருப்பதை கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். சுப்மான் கில், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டுகளில் 45 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அணிக்கு திரும்பியிருப்பது சாதகமான அம்சமாகும்.

முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘இஷாந்த் ஷர்மா இயல்பான நிலைக்கு வந்து விட்டார். கணுக்கால் காயத்துக்கு முன்பு எப்படி பந்து வீசினாரோ அதே போல் பயிற்சியின் போது பந்து வீசுகிறார். அவர் ஏற்கனவே நியூசிலாந்து மண்ணில் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மயங்க் அகர்வால் ஒரு நாள் தொடரில் சோபிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஆண்டில் அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளார். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவராக திகழ்கிறார்.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் அச்சமின்றி விளையாடக்கூடியவர்கள். அவர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தர வேண்டும் என்று அணி எதிர்பார்க்கிறது. அதற்காக அவர்களை ஒட்டுமொத்த அணியினரும் உற்சாகப்படுத்துகிறோம். அதே சமயம் எதிரணியின் பந்து வீச்சை கண்டு எந்த வகையிலும் பயந்து விடக்கூடாது.

ஜோகன்னஸ்பர்க் (தென்ஆப்பிரிக்கா) ஆடுகளமாக இருந்திருந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோம் என்று சொல்லியிருப்பேன். ஆனால் 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே எங்களால் எதிரணியை முடக்க முடியும். இங்கு நிச்சயம் உலகத்தரம் வாய்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவையாகும்’ என்றார்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், காயத்தில் இருந்து தேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் திரும்பியிருப்பது அவர்களின் பந்துவீச்சை வலுப்படுத்துகிறது. மூத்த பேட்ஸ்மேன் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100 போட்டிகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறப்போகிறார்.

நியூசிலாந்து அணி, உள்ளூரில் எப்போதும் அசுர பலம் வாய்ந்தது. டாம் லாதம், வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். மற்றொரு பிரதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. வாக்னெரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இதனால் அவர் இன்னும் நியூசிலாந்து அணியுடன் இணையவில்லை. இதை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. அதற்கு இந்த தொடரில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் இந்த டெஸ்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *