Tamilவிளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 13 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2-ல் இ்ந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. 10 ஆட்டங்கள் டிரா ஆனது. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை டெஸ்டில் தோற்றது கிடையாது. 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் டிராவும் சந்தித்து இருக்கிறது.

அதே சமயம் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டுகிறது. எனவே டெஸ்டில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.