இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் – நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

4 டெஸ்ட் கொண்ட தொடரில் அடிலெய்டில் பகல் – இரவாக நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (ஜனவரி 15) தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் எந்த அணி தொடரை வெல்ல போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் இந்தியாவின் எழுச்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. அதில் இருந்து நம்பமுடியாத அளவில் மீண்டு 2-வது டெஸ்டில் வென்று சரியான பதிலடி கொடுத்தது. சிட்னி டெஸ்டில் கடுமையாக போராடி தோல்வியை தவிர்த்தது.

இதனால் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. கடந்த முறை (2018-19) 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது. தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வென்றால் ஒட்டுமொத்தமாக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படும்.

அதே நேரத்தில் வெற்றி பெறாவிட்டாலும் தோல்வியை தவிர்த்து டிரா செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். வீரர்களின் காயம் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

சிட்னி டெஸ்டில் ஜடேஜா, ரி‌ஷப் பண்ட், விஹாரி, பும்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் ரி‌ஷப் பண்ட் தவிர மற்ற 3 பேரும் கடைசி டெஸ்டில் ஆடமாட்டார்கள். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஆகும்.

ஜடேஜா இடத்தில் ‌ஷர்துல் தாகூரும், பும்ரா இடத்தில் தமிழக வீரர் நடராஜனும் இடம்பெறுவார்கள். விஹாரி இடத்தில் மயங்க் அகர்வால் அல்லது பிரித்விஷாவுக்கு வாய்ப்பு உள்ளது. இதில் அகர்வால் முழு உடல் தகுதி இல்லை என்றால் பிரித்வி ஷா இடம்பெறுவார்.

காயத்துடன் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இந்த டெஸ்டில் ஏற்பட்டுள்ளது.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சிட்னி டெஸ்டில் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தது. இதை தவற விட்டதால் அந்த அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.