இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் – இலங்கை அணியில் இருந்து குசல் பெரேரா விலகல்

இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு ஷிகர்தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இப்போட்டி தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா, காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார்.

குசல் பெரேரா தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், காயத்தின் தன்மை அல்லது அவர் தொடரில் இருந்து விலகுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அணியின் டாக்டர் கூறும்போது, குசல் பெரேரா, ஆறு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக குசல் பெரேரா இருந்தார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை இலங்கை இழந்தது.

இதனால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் அவர் காயம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காரணமாக விலகி உள்ளார்.