Tamilசெய்திகள்

இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம் – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது. இந்த பிரச்சினை குறித்து ஐ.நா. உள்பட உலகநாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பிரச்சினையில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டித்தது பற்றி சீன அரசிடம் எடுத்துக் கூறுவதற்காக விரைவில் சீனா செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு குரேஷி கூறினார்.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இது உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா கூறிவருகிறது. இதில் இந்தியா தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதி என்று சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய அரசு இதனை மாற்றாமல் காஷ்மீர் மக்களோ, பாகிஸ்தானோ ஒருபோதும் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பாகிஸ்தான் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி தீர்வுகாண எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இந்தியா தான் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து நழுவிச் செல்கிறது.

இவ்வாறு பைசல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *