இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2427 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,71,59,180 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,74,399 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.21 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 93.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 14,01,609 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,27,86,482 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 36,63,34,111 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 15,87,589 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.