இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 22 ஆயிரமாக குறைந்தது

கொரோனா 3-ம் அலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், புதிய பாதிப்பு 22 ஆயிரமாக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 28 லட்சத்து 2 ஆயிரத்து 505 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 2.07 சதவீதத்தில் இருந்து 1.80 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.76 சதவீதத்தில் இருந்து 2.50 ஆகவும் குறைந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 2,068, கர்நாடகாவில் 1,333, தமிழ் நாட்டில் 1,146, ராஜஸ்தானில் 1,233, மிசோரத்தில் 1,151 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 191 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 325 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,11,230 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 60,298 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,53,739 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 38,353 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 36,28,578 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 175 கோடியே 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 75.81 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 12,35,471 மாதிரிகள் அடங்கும்.