இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான் – மத்திய ஆரசு தகவல்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், அடுத்த 2 நாளில் கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

இந்த வைரஸ் இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ந் தேதி நுழைந்தது. தற்போது நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

இந்தநிலையில் மத்திய அரசின் சார்பில் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற இன்சாகோக் என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் அறிகுறியற்றவை அல்லது லேசானவை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு சேர்ப்பு தற்போதைய அலையில் அதிகரித்துள்ளன. அச்சுறுத்தல் நிலை மாறாமல் உள்ளது.

* ஒமைக்ரானின் புதிய வடிவமான பிஏ.2, நாட்டின் கணிசமான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

* ஒமைக்ரானைப் பொறுத்தமட்டில் தற்போது அது சமூகப்பரவலில் உள்ளது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கு புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

* இந்தியாவில் ஒமைக்ரானின் பரவல், உள்நாட்டு பரிமாற்றம் மூலமாகவே இருக்கும்.

* ஒமைக்ரானின் மரபணு மாறுபாடான ‘எஸ் ஜீன்’ விடுபடுதல் அடிப்படையிலான சோதனை, அதிக தவறான எதிர்மறை முடிவுகளை தருகிற வாய்ப்பு உள்ளது.

* சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பி.1.640.2 பரம்பரை, கண்காணிக்கப்படுகிறது. இது வேகமாக பரவுவதற்கான ஆதாரம் இல்லை. மேலும் நோய் எதிர்ப்புக்குத் தப்பிக்கிற அம்சங்களைக் கொண்டுள்ள போதும், அது கவலைக்குரிய மாறுபாடாக தற்போது இல்லை. இதுவரை இந்தியாவில் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.

* கொரோனா தொற்றுக்கான பொருத்தமான நடத்தை மற்றும் தடுப்பூசிகள், சார்ஸ் கோவ்-2 வைரசின் அனைத்து வடிவ மாற்றங்களுக்கும் எதிரான முக்கிய கவசங்கள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.