இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு ஒரு வாரத்தில் 7.5 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை மே மாத தொடக்கத்தில் உச்சம் அடைந்தது. அதன்பிறகு தொடர்ந்து 11 வாரங்களாக பாதிப்பு குறைந்து வந்தநிலையில், கடந்த வார பாதிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 2.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் 2.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் ஒரு வாரத்தில் பாதிப்பு 7.5 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது.

தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தொடர்ந்து 6-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேல் (20,728 பேர்) பாதிப்பு உள்ளது.

மகாராஷ்டிரத்தில் 6,479, ஆந்திராவில் 2,287, தமிழ்நாட்டில் 1,990, கர்நாடகாவில் 1,875, ஒடிசாவில் 1,437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 157, கேரளாவில் 56, ஒடிசாவில் 64 பேர் உள்பட நேற்று 422 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் 541 பேர் பலியான நிலையில், நேற்று உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,32,948 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 36,946 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 467 ஆக உயர்ந்தது.

தற்போது 4,13,718 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 2,766 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,06,598 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 47.22 கோடி டோஸ்களாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று 14,28,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 46.96 கோடியாக உயர்ந்தது.