இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியாவில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் 3-வது அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் நீண்டதொரு போராட்டத்தை நடத்துகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் 3-வது அலை குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளும் வந்தவண்ணமாக உள்ளன

இது குறித்து எம்.வித்யாசாகர் (சூத்ரா மாதிரி விஞ்ஞானி) கூறியதாவது:-

நோய் எதிர்ப்பு பொருள் குறைகிறபோது, நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளைப்போடுவது அதிகரிக்காவிட்டாலும், கொரோனா கால கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டாலும் இன்னும் 6 முதல் 8 மாதங்களில் 3-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.இருப்பினும் சூத்ரா மாதிரி 3-வது அலையை கணிக்கவில்லை. அது தொடர்பாக செயல்பட்டு வருகிறது.

எங்கள் எதிர்கால கணிப்புக்காக எங்கள் மாதிரியில் நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசி அம்சங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தாலியில் மிலானில் உள்ள சான் ரபேல் ஆஸ்பத்திரி நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு பொருள் குறைந்தது 8 மாதங்கள் வரை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் நடத்திய செரோ சர்வேயில், 5 அல்லது 6 மாதங்களில் நோய் எதிர்ப்பு பொருள் குறைந்துவிடுவதால், ஒருவர் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என தெரிய வந்தது.

முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன், வைரஸ் மேலும் உருமாறுகிறபோது 3-வது அலை தவிர்க்க முடியாது, அதற்கு தயாராக வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி எச்சரித்தார். அடுத்த 2 நாளில் அவர் கூறும்போது, “நாம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால், மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினால் 3-வது அலை எல்லா இடங்களிலும் அல்லது உண்மையில் எங்கும் வராமல் போகலாம். இது எந்தளவுக்கு மாநிலங்களில் உள்ளூர் அளவில், மாவட்ட அளவில், நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் அமையும்” என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.