இந்தியாவின் ஆபரண தங்கத்தின் தேவை 42 சதவீதமாக குறைந்தது – உலக தங்க கவுன்சில் தகவல்

உலக தங்க கவுன்சில், தங்கத்தின் தேவை உலக அளவில் எந்த அளவுக்கு இருக்கிறது. இந்தியாவிலும் அதன் தேவை எவ்வளவாக உள்ளது? என்பது குறித்த விவரங்களை ஒவ்வொரு காலாண்டு நிறைவிலும் தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில் கடந்த ஆண்டின் 4-வது காலாண்டு விவரங்கள் மற்றும் ஆண்டின் மொத்த விவரங்களை உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குனர் (இந்தியா) சோமசுந்தரம் நிருபர்களிடம் இணையதளம் வாயிலாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தங்கத்தின் தேவை (நுகர்வோர் தேவை) உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்து, 3 ஆயிரத்து 759.6 டன்னாக இருந்தது. அதேபோல் ஆபரண தங்கத்தின் தேவை 34 சதவீதம் சரிந்து, 1,411.6 டன்னாக இருந்தது. இந்தியாவை பொறுத்தவரையில், நுகர்வோருடைய தங்கத்தின் தேவை 35.4 சதவீதமாகவும், ஆபரண தங்கத்தின் தேவை 42 சதவீதமாகவும் குறைந்து 315.9 டன்னாக இருக்கிறது.

இதேபோல், தங்க நாணயம், தங்க கட்டியின் தேவையை பார்க்கும்போது, கடந்த 2020-ம் நிதியாண்டு முழுவதையும், அதன் முந்தைய ஆண்டுடன் (2019) ஒப்பிடுகையில் தங்க நாணயம், கட்டி ஆகியவற்றின் தேவை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. மத்திய வங்கியின் தங்க கொள்முதல் தொடர்ந்து சரிந்த வண்ணமே இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 59 சதவீதம் குறைந்து, 272.9 டன்னாக இருக்கிறது.

தங்கத்தின் தேவை உலகளவில் குறைந்திருந்தாலும், அதில் முதலீடு என்பது உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு என்பது 11 சதவீதம் குறைந்து 130.4 டன்னாக இருக்கிறது. எடை அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்திருந்தாலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பதால், தொகை மதிப்பில் முதலீட்டை பார்க்கையில் உயர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் கொரோனா தொற்றின் தாக்கம், பொது ஊரடங்கு, பொருளாதார பலவீனம் 2020-ம் ஆண்டு முழுவதிலும் நீடித்ததன் காரணமாகவே தங்கத்தின் தேவை சரிந்துள்ளது. அதிலும் 3-வது காலாண்டில் பெரிய அளவில் தங்கத்தின் தேவை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.