இங்கிலாந்து தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? – விளக்கம் கேட்கும் பாகிஸ்தான் வீரர்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அவர் 14 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

அஸ்வின் 81 டெஸ்டில் விளையாடி 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு இங்கிலாந்து பயணத்தின்போது ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டியில் வெற்றிபெற்றது. ஒரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்திய அணி விளையாடிய 4 டெஸ்டிலும் அஸ்வின் ஆடவில்லை.

நியூசிலாந்து தொடரில் அபாரமாக பந்துவீசிய அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் விராட் கோலி, அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காததை இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர். அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்.

அணிக்கு மீண்டும் திரும்பிய அஷ்வின் தனது திறமையை நிரூபித்தார். தனது முக்கியத்துவத்தை அவர் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.