ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யு.ஏ.இ-க்கு விரைந்தனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 சீசன் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 8 அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் கடந்த மாதம் 21-ந்தேதி, 22-ந்தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்குள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் ஆறு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பின் மூன்று கொரோனா பரிசோதனைக்குப்பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய வெயின் பிராவோ, பொல்லார்டு, அந்த்ரே ரஸல், ரஷித் கான், இம்ரான் தாஹிர் உள்பட ஐபிஎல்-லில் இடம் பிடித்துள்ள வீரர்கள் துபாய் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடர் முடிந்த கையோடு ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள இரண்டு அணிகளின் 21 வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் முதல் ஒருவார போட்டிகளில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்தில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் இருப்பதால் மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியது. இந்நிலையில் 36 மணி நேர கோரன்டைன் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றிரவு ஐக்கிய அரபு அமீரகம் சென்றடையும் இருநாட்டு வீரர்களும் 36 மணி நேரத்திற்குப்பிறகு நேரடியாக போட்டியில் கலந்து கொள்வார்கள்.